இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், நவம்பர் 30, 2015

2015 தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு அறிக்கை
          தேசிய குழந்தைகள் அறிவியல் சேலம் மாவட்ட மாநாடு கடந்த இரண்டு வருடங்களாக அரசு பள்ளியில் நடத்தி வருகிறோம். இவ்வருடமும் கொங்கணாபுரம் ஒன்றியதிலுள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டது. ஒரு நாள் அறிவியல்  திருவிழாவாகவும், ஒரு நாள் மாவட்ட மாநாடு என இரண்டு நாள் நிகழ்வாக நடத்த திட்டமிட்டு நவம்பர் 13 மற்றும் 14ந் தேதிகள் (வெள்ளி மற்றும் சனிகிழமை) முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் செய்யப்பட்டது.
            மாநாட்டிற்கு விஞ்ஞானிகள் பொன்ராஜ், நெல்லை சு முத்து, அய்யப்பன் ஆகியோரை அழைப்பது என திட்டமிடப்பட்டது. நோட்டிஸ் மற்றும் அழைப்பிதழ் அடிக்கப்பட்டு பள்ளியிலிருந்து அப்பகுதி மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. கொங்கணாபுரம் பஸ் நிலையம் உள்பட 4 இடங்களில் அறிவியல் திருவிழா மற்றும் மாவட்ட மாநாடு பற்றிய விஞ்ஞானிகள் படங்களுடன் கூடிய பிளக்ஸ் வைக்கப்பட்டது. புதுப்பாளையதிற்கு பஸ் வசதி சரியாக இல்லை என்ற காரணத்தால் மாநாட்டிற்கு வருகை தரும் குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு வசதியாக யுனிவர்சல் மற்றும் AGN பள்ளிகளிருந்து பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பான உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பான ஏற்பாடுகளை அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு முருகம்மாள், ஆசிரியர் தினேஷ், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அப்பள்ளியின் முன்னால் மாணவர்கள் அமைப்பான புதுமை பாய்ஸ் நண்பர்கள் 75 பேர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
1.    அறிவியல்  திருவிழா மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் சேலம் மாவட்ட மாநாடு இரண்டும் கடந்த காலங்களில் நடைபெற்றதைவிட மிகச் சிறப்பாக இருந்தது.
2.    இது நாம் அரசு பள்ளியில் நடத்துவது என்ற நமது முடிவிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்.
3.   இரண்டு வருடங்களாக கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளுக்கு சென்று மாவட்ட மாநாடு நடத்தியது, அறிவியல் இயக்கம் கிராமங்களுக்கு செல்ல வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை நிறைவேற்றும் நிகழ்வாகும் இது.
4.   கிராம இளைஞர்கள் சினிமா பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடுவதைவிட ஒரு அறிவியல் நிகழ்ச்சி நடத்தியது நமக்கும் அவர்களுக்கும் ஒரு மகிழ்வான நிகழ்வாகும்.
5.    இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் கன்னந்தேரி மற்றும் புதுப்பாளையம் பள்ளிகளுக்கு தொடர்புடைய ரோட்டரியை சேர்ந்த நண்பர்கள் அடுத்த வருடம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்த வேண்டும் என கேட்டு கொண்டார்கள். வேண்டிய ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருகிறோம் என கூறினார்கள்.
6.    பள்ளி ஆசிரியர்கள், புதுமை பாய்ஸ் நண்பர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டது பாரட்டபட வேண்டிய விஷயம்.
7.    மாநிலச் செயலாளர் திருமிகு சேதுராமன் திருவிழா மற்றும் மாநாடு ஒரு கிராமத்தில் இவ்வாறு நடப்பது மாநில அளவில் ஒரு சிறந்த நிகழ்வு என பாரட்டியது.
8.    கோவை வேளாண் விஞ்ஞானி பாலசுப்ரமணியம் அவர்கள் தொடர்ந்து NCSCல் கலந்து கொள்கிறார். அவரும் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பாரட்டினார்.
9.    மாநாடு மற்றும் அறிவியல் திருவிழா நடைபெற்றதால் திருமிகு தினேஷ் மற்றும் தலைமையாசிரியர் திருமிகு முருகம்மாள் ஆகியோர் முயற்சியால் அப்பகுதியில் சுமார் 30 துளிர் இல்லங்கள் மாநில மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10.            அப்பகுதியிலுள்ள யுனிவர்சல் மேல்நிலைப்பள்ளி மற்றும் AGN பள்ளி ஆகிய இரு தனியார் பள்ளிகள் ஒரு அரசு பள்ளியில் நடைபெறும் விழாவிற்கு நிதி உதவி அளித்ததுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தது ஒரு பெருமைபட வேண்டிய நிகழ்வாகும்.

கிராம அறிவியல் திருவிழா
            13/11/2015 வெள்ளியன்று மதியம் 02.30 மணிக்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து விழா மேடைக்கு கன்னந்தேரி பள்ளி மாணவர்களின் கரகாட்டத்துடன் செல்ல, அதை தொடர்ந்து விஞ்ஞானி நெல்லை சு முத்து, அறிவியல் இயக்க நிர்வாகிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்ற ஊர்வலத்துடன் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி ஆரம்பமானது.
            மேடையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமிகு க செந்தில்குமார் தலைமையுரையாற்றினார். பள்ளி மாணவர்களின் கரகாட்ட நிகழ்ச்சி, பாடல், கிராமிய நடனம், நாடகம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திருமிகு இளங்கோ அவர்கள் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து விஞ்ஞானி நெல்லை சு முத்து அவர்கள்  கலீலியோ முதல் கலாம் வரை என்ற படத்துடன் கூடிய அறிவியல் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கோவை வேளாண் கல்லூரியின் விஞ்ஞானி பாலசுப்ரமணியம் அவர்கள் நமது பகுதியைப் பற்றி  வேளாண்மை கருத்துகளை அறிதல் நிகழ்ச்சிபடத்துடன் கூடிய உரை நிகழ்த்தினார்.
            அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் திருமிகு சேதுராமன்  அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி இடை இடையே நடைபெற்றது. நிகழ்ச்சி இரவு 10.00 மணி வரை நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சி முடியும் வரையில் கலைந்து செல்லமால் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு
            14/11/2015 சனியன்று காலை மாவட்ட மாநாடு பதிவுடன் ஆரம்பமானது. 10 அரசு பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், 6 தனியார் பள்ளிகள் என மொத்தம் 19 பள்ளிகளிலிருந்து 63 குழுக்கள் பங்கேற்றது.  அதில் 7 பள்ளிகள் நம்பர் 27,28 மற்றும் 29ந் தேதிகளில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்றனர். அதில் ஆத்தூர் சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஜி. டி. நாயுடு துளிர் இல்லத்தின் கங்கா தேவி குழுவினர் 2015 டிசம்பரில் சண்டிகரில் நடைபெறும் தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு சேலம் மாவட்டம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதுப்பாளையத்தில் குழந்தைகள் தங்களுடைய ஆய்வறிக்கையை சமர்பித்தனர். பெரியார் பல்கலை கழக ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் சேலம் உருக்காலை நண்பர்கள் ஆய்வுகளை மதிப்பீடு செய்தனர். மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிக்கும்போது ஆசிரியர்கள் மற்றும் பொற்றோர்களுக்கு விஞ்ஞானி அய்யப்பன் அவர்களின் குறும்படத்துடன் கூடிய உரை நடைபெற்றது. நிகழ்வை திருமிகு ஜெயமுருகன் ஒருங்கிணத்தார். திருமிகு சுரேஷ்குமார் மற்றும் திருமிகு ஸ்ரீனிவாசன் நடுவர்களுடன் கலந்தாலோசித்து மாநில மாநாட்டிற்கு 7 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.
            மதிய உணவிற்கு பிறகு விஞ்ஞானிகள் அய்யப்பன், நெல்லை சு முத்து மற்றும் பாலசுப்ரமணியம், அறிவியல் இயக்க நண்பர்கள், ஊர் பெரியவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆய்வறிக்கை சமர்பித்த மாணவர்கள், புதுப்பாளையம் மற்றும் அருகிலுள்ள பள்ளி மாணவர்களுடன் பள்ளியிலிருந்து விழா மேடைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றனர்.
            விழா பள்ளி தலைமையாசிரியர் திருமிகு முருகம்மாள் அவர்கள் வரவேற்புரையுடன் தொடங்கியது. அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திருமிகு இளங்கோ அவர்கள் தலைமையுரையுடன் விழா தொடங்கியது. கல்வி துறையை சேர்ந்த திருமிகு சிவக்குமார், மற்றும் அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அய்யப்பன், நெல்லை சு முத்து மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்புரை ற்றினார்கள்.
            பிறகு பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் ஷீல்டு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுகளை ஒருங்கிணைப்பாளர் திருமிகு சீனிவாசன் அறிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் வழிகாட்டி ஆசிரியருடன் விழா மேடைக்கு அழைக்கப்பட்டு அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். விஞ்ஞானிகள், ஊர் பெரியவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பொன்னாடை போர்த்தி ஷீல்டு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். இறுதியாக புதுப்பாளையம் பள்ளி ஆசிரியர் திருமிகு தினேஷ் அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதாக முடிந்தது. அதன்பிறகு பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சி இரவு 8 மணிவரை நடைபெற்றது.
            இவ்விரண்டு நிகழ்வுகளிலும் திருமிகு இளங்கோ, திருமிகு சுரேஷ்குமார், திருமிகு ஜெயமுருகன், திருமிகு ராமமூர்த்தி, திருமிகு ஜெயக்குமார், திருமிகு சந்திரசேகர், திருமிகு ஷாஹிரா, திருமிகு லால், திருமிகு பவளவள்ளி, திருமிகு நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டு வேலைகளை பகிர்ந்து செய்தனர். திருமிகு பழனி, திருமிகு சத்தியமூர்த்தி மற்றும் திருமிகு வெங்கேடஷ் ஆகியோர் விழாவில் பங்கேற்று உதவிகள் செய்தனர். இவ்விரண்டு நாள் நிகழ்ச்சிகளை மேடையில் திருமிகு ஜெயமுருகன் அவர்களும் மற்ற நிகழ்வுகளை திருமிகு சுரேஷ்குமார் அவர்களும் பள்ளி ஆசிரியர் திருமிகு தினேஷ் அவர்களுடன் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
          கிராம அறிவியல் திருவிழா மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆகிய இரண்டு நாள் விழா அப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், புதுமை பாய்ஸ் நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்களை மிகவும் சந்தோஷம் அடைய வைத்தது.


மாநில மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள்
1.    சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளி துளிர் இல்லம்
2.    சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளி
3.    பெரியேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
4.    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
5.    சானராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
6.    தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி
7.    சேலம் உருக்காலை வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

தேசிய மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு
            ஆத்தூர் சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஜி. டி. நாயுடு துளிர் இல்லத்தின் கங்கா தேவி குழுவினர் 2015 டிசம்பரில் சண்டிகரில் நடைபெறும் தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு சேலம் மாவட்டம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக