முனைவர் நா.மணி
டோக்கியோ அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் கணிதத்
துறை தலைவர் அவர். கணித மேதை இராமானுஜன் பற்றி ஜப்பானிய மொழியில்
புத்தகம் எழுதி உள்ளார். நூலாக்கத்தின் துவக்க கட்டத்தில் ஈரோடு
வந்திருந்தார். அந்நூலை வெளியிடும் பதிப்பக உரிமையாளர், புகைப்பட
கலைஞர், அறிவியல் இயக்க ஆர்வலர் என ஒரு குழுவாக வந்தனர். என்னைத்
தொலைபேசியில் அழைத்து, ’இராமனுஜன் வீட்டைப் பார்வையிட வேண்டும் அழைத்துச்
செல்லுங்கள்” என்றனர். கணிதமேதை இராமனுஜன் ஈரோட்டில் பிறந்தவர் என்று
அறிவேனே தவிர, ஈரோட்டில் அவர் பிறந்த இடத்தை அறிந்து கொள்ளும்
முயற்சியில் இறங்கியது இல்லை. இவ்வாறு அறிந்து கொள்ளாமல் இருந்தமைக்கு
மிகவும் வெட்கப்பட்டேன். நம்பி வந்த குழுவினருக்கு உதவிடும் முயற்சியில்
இறங்கினேன். வரலாற்று ரீதியாக பல விபரங்களை அறிந்த ஓர் அறிவு ஜீவியை
தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவரோ, ’அய்யா, கணித மேதை ஈரோட்டிலா
பிறந்தார்?” என்றார். இதற்கு மேல் யாரிடம் கேட்பது என்று ஐயம் மேலிட
எனக்குத் தெரிந்தவர்கள், விபரமறிந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலரிடமும்
கேட்டேன். அரை மணி நேர தகவல் அறியும் எனது முயற்சி படுதோல்வியில்
முடிந்தது. ஜப்பான் கணிதப் பேராசிரியர் என் அழைப்புக்காக விடுதியில்
காத்துக் கொண்டு இருந்தார். வருத்தம் தோய்ந்த மனதுடன் நேரில் காண
சென்றேன்.
‘ஈரோடு, தெப்பக்குளம், பழைய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு
எதிர்வீடு” என்ற ஆவணக் குறிப்பை வைத்துக் கொண்டு ஆட்டோவில் அங்கு சென்று
அடைந்தோம். ஈரோட்டின் மையப்பகுதி அது. ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில்
இருக்கிறது. உண்மையில் தெப்பக்குளம் எந்தக் காலத்தில் இருந்ததோ
தெரியவில்லை. தெப்பக்குளம் என்ற பெயர்; மட்டும் நின்று நிலவுகிறது.
அறிவு ஜீவிகளுக்கு தெரியாத இடத்தை ஆட்டோ டிரைவர் எளிதாக கண்டுபிடித்து
கொடுத்தார். கதவு எண்.18, அழகிய சிங்கர் வீதி, தெப்பக்குளம், ஈரோடு - 1
என்பதே அந்த வீட்டின் முகவரி. இங்குதான், 124 ஆண்டுகளுக்கு முன்
22.12.1887 - ல் கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்தார். நாளை முதல்
125 ம் ஆண்டு தொடங்குகிறது.
இராமானுஜன் வாழ்ந்த இடங்களைப் பார்வையிட ஜப்பானிய பேராசிரியர் பல
முறை சென்னைக்கும், கும்பகோணத்துக்கும் வந்திருந்ததாகவும், அவர் பிறந்த
இடத்தைப் பற்றிய குறிப்புகள் இன்மையால் துயரத்துடன் திரும்பிச்
சென்றதாகவும் கூறினார். தனது வாழ்நாளில் இதனை விட கூடுதல் மகிழ்ச்சி
அடைந்த தருணம் இல்லை எனக் கூறி, நம்மை இறுக்கி அணைத்துக் கொண்டார். அவர்
பிறந்த வீட்டையும், அந்த வீதியையும் போட்டோவாக எடுத்துத் தள்ளினர்
புகைப்படக் கலைஞர். அந்த வீதியில் குடியிருந்தோருக்கும் கூட அன்றுதான்
கணிதமேதை இராமானுஜன் பிறந்த இடம் பற்றி தெரிய வந்தது. சென்னையில் உள்ள
இராமானுஜன் அருங்காட்சியகத்திற்கும் அது முக்கிய ஆவணம். உலக வரலாற்றில்,
கணிதமேதை இராமானுஜன் பிறந்த இடம் பற்றிய முதல் புகைப்படம் எடுக்கப்பட்ட
நாள் அன்றுதான். இந்த சம்பவம் என்றோ நடந்தது என்று எண்ணி
விடாதீர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2008 - ஆம் ஆண்டு ஆகஸ்ட்
17 ம்தேதி.
இராமானுஜன் பிறந்த வீடு, தற்போது அவரது சொந்தக்காரர்கள் வசம் கூட
இல்லை. பெருமுயற்சி எடுத்து தேடிப்போகும் ஒன்றிரண்டு பேரிடம் கூட வீட்டு
உரிமையாளர், ‘கணித மேதை இராமானுஜன் இங்கேதான் பிறந்தாரா?” என்ற
கேள்விக்கு ஆம் என பல நேரங்களில் பதில் தருவதில்லை. இந்த விசயம்
பிரபலமாகி, வீட்டை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமோ என்ற பயம். ஜப்பான்
பேராசிரியர் சக்குராய் வந்த அன்று உரிமையாளர் வீட்டில் இல்லை. அவரது
மகன் ஆற அமர வைத்து உபசரித்து அனுப்பினார். நான் பார்க்கும்
நண்பர்களிடம் எல்லாம் இந்த வீட்டைப் பற்றி சொல்லித் திரிகிறேன்.
அவ்வீட்டைக் காண விளைவோரிடம் நான் கூறும் செய்தி இதுதான். ‘ஈரோடு பிர‡ப்
ரோட்டில் உள்ள சிவரஞ்சனி ஓட்டலுக்கு எதிர் சந்தில் செல்லுங்கள். அழகிய
சிங்கர் வீதி வலது புறத்தில் வரும். வீதியில் நுழைந்ததும் நான்கு, ஐந்து
வீடுகள் தள்ளி மஞ்சள் கோபி நிறத்தில், உள்ள வீடு. ஜோதி நிலையம் என்று
பெயர் எழுதப்பட்டிருக்கும். சற்று நேரம் நின்று பார்த்து விட்டு வந்து
விடுங்கள்” என்பதுதான். இந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்தப் பக்கம்
செல்லும் போதெல்லாம் அழகிய சிங்கர் வீதியில் நுழைந்து, அந்த வீட்டின்
மீது ஓர் பார்வை வீசி விட்டு வருகிறேன்.
எனது அலைபேசி எண்ணில் ஒரு முறை லண்டன் கணிதப் பேராசிரியை ஒருவர்
தொடர்பு கொண்டார். தான் இந்தியாவுக்கு வந்திருப்பதாகவும்
திருவனந்தபுரத்தில் இருப்பதாகவும் கூறினார். கோவைக்கு விமானத்தில்
வந்து, அங்கிருந்து ஈரோட்டுக்கு காரில் வர இருப்பதாக கூறினார். தனக்கு
கணித மேதையின் வீட்டை காண்பிக்க வேண்டும் என்றார். ‘நான் ஊரில் இல்லை.
பிறிதொரு முறை வாருங்கள்” என்றேன். ‘நான் பல முறை இந்தியா வந்துள்ளேன்.
பல முறை கும்பகோணம், சென்னை என சென்று, அவர் வாழ்ந்த இடங்களை எல்லாம்
பார்வையிட்டுள்ளேன். ஈரோடு வந்து, அவரது பிறப்பிடம் கண்டுபிடிக்க
இயலாமல் திரும்பிச் சென்ற நாட்களும் உண்டு. எனவே தயவு கூர்ந்து உதவி
செய்யுங்கள்” என்றார். மாற்று ஏற்பாடு மூலம் காண ஏற்பாடு செய்தேன்.
லண்டனில் இருந்து வந்த பெண் பேராசிரியர் என்பதால் வீட்டு உரிமையாளர்
வீட்டில் இருந்தும், மறுப்பு எதுவும் கூறாமல் வீட்டில் அனுமதித்து,
உபசரித்து அனுப்பினார். கார் ஏறும் போது அவருக்கு ஆனந்தக் கண்ணீர்
பெருக்கெடுத்தது.
கணிதம் படித்த அனைவரும் கணித மேதை இராமானுஜனை அறிவர்.
இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது.
இராபர்ட் கனிகள் என்ற இங்கிலாந்து நாட்டுக்காரர் எழுதிய நூலின் தலைப்பு
‘;முடிவற்றதைக் கண்டறிந்த மனிதன்” என்பது. இந்தப் புத்தகம் பல
பதிப்புகளைக் கண்டுள்ளது. இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று நூல்களில்
தலைசிறந்ததாக கருதப்படுவதும் இந்த நூலே. இத்தகைய நூல்கள் ஒரு பக்கம்.
இராமானுஜன் இறந்த பிறகு, அவரது சமன்பாடுகள், கோட்பாடுகளை ஆய்ந்தறிந்த
கணித மேதைகளுடன் இணைத்து பெயரிடப்பட்ட சமன்பாடுகள் அவரது பெயரிடப்பட்ட
ஆய்விதழ்கள், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பரிசுகள் ஆய்வு மையங்கள்
என 25 க்கும் மேல் பட்டியல் நீளும்.
ராயல் சொசைட்டி ஆ‡ப் இங்கிலாந்தின் மதிப்புமிக்க அங்கத்தினராக
மிக இளவயதில் தேர்வு செய்யப்பட்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவர்
செய்த ஆய்வுகளுக்காகவே டீ.யு. பட்டம் வழங்கியது. அந்த டீ.யு. பட்டமே
பின்னர் டாக்டர் பட்டமாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.
இத்தகைய கௌரவம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வேறு எவருக்கும்
வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.
கணித மேதை இராமானுஜத்தை கண்டெடுத்து உலகறியச் செய்தவர்
பேராசிரியர் ஹார்டி. இவரிடம் ‘உலகக் கணித மேதைகளை 100 புள்ளிகளைக் கொண்ட
அளவுகோலில் அளந்தால் யார், யார் எத்தனை புள்ளிகள் தேறுவர்” என்று
கேட்டனர். ‘நான் ஒரு 25 புள்ளிகள் தேறுவேன். லிட்டில்வுட் 30 புள்ளிகள்
பெறுவார். டேவிட் ஹில்பர்ட்டுக்கு 80 புள்ளிகள் வழங்கலாம். 100
புள்ளிகள் பெற தகுதியுள்ளவர் இராமானுஜன் மட்டுமே” என்றார்.
இராமானுஜத்தின் இரண்டாவது நோட்டுப் புத்தகத்;தில் இருந்த 47
கோட்பாடுகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பேராசிரியர் ஹார்டி
‘எஞ்சியுள்ள ஆய்வுகளை தொகுத்து வெளியிட என் ஆயுட்காலம் போதாது. வேறு
எந்த ஆய்விலும் ஈடுபட முடியாது” என மலைத்துப் போய் கூறினார். 18ஆம்
நூற்றாண்டில் உலகப் புகழ் பெற்று விளங்கிய ஜெர்மனிய கணித மேதை ஜேகப்
ஜேகோபியுடனும், 17 ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ் பெற்று விளங்கிய சுவிஸ்
நாட்டு கணித மேதை லியனார்டு ய+லரோடும் ஐரோப்பிய கணித மேதைகள் இவரை
ஒப்பிடுகின்றனர்.
இராமானுஜத்தின் வாழ்வையும் பணியையும் முன் வைத்து பத்துக்கும்
மேற்பட்ட புகழ்பெற்ற திரைப்படங்கள், நாடகங்கள், புனைக் கதைகள் உலகம்
முழுவதும் எழுதப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகள் உடலில் புகுந்து
இராமானுஜத்தின் உடலை அரிக்கத் தொடங்கிய பின்னரே, இங்கிலாந்து செல்ல
கப்பல் ஏறினார். 1914 முதல் 1919 வரையான கேம்பிரிட்ஜ் வாழ்க்கையில்
நோயுடன் போராடிக் கொண்டே, கணிதம் என்னும் பெருங்கடலில் மூழ்கி,
முத்தெடுத்த வண்ணமே இருந்தார். முறைப்படியான கணித கல்வி பெறாமலும்,
ஐந்தாண்டு காலத்திலும், இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய மனிதன்; உலகில் இவர்
ஒருவராகத்தான் இருக்க முடியும்.
ஐன்ஸ்டினின் இயற்பியல் சாதனைகளை போற்றிட 2005ம் ஆண்டை சர்வதேச
இயற்பியல் ஆண்டாக சர்வதேச சமூகம் கொண்டாடியது. கலிலியோவின் பங்களிப்பை
வானவியலில் போற்றும் வகையில் 2009ம் ஆண்டு சர்வதேச வானவியல் ஆண்டாக
பன்னாட்டு சமூகம் கொண்டாடி மகிழ்ந்தது. வேதியியலுக்கு மேரிகிய+ரி ஆற்றிய
பங்கை நினைவு கூற 2011ம் ஆண்டு சர்வதேச வேதியியல் ஆண்டாக
கொண்டாடப்பட்டுள்ளது. இராமானுஜத்தின் 125ஆம் ஆண்டு பிறந்த ஆண்டையொட்டி
2012ஆம் ஆண்டு சர்வதேச கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அவ்வாறு ஐ.நா.சபை அறிவிக்காமல் விட்டது வேதனை அளிக்கும் விசயம்.
அதனினும் கொடியது, 125 ஆண்டுகளுக்குப் பிறகும், கணித மேதை இராமானுஜன்
பிறந்த இடம் உலகம் அறியாமல் இருப்பது. அதனை அறிந்தவர்கள் கூட அந்த
வீட்டிற்குள் சென்று, நிதானமாக பார்த்து வர முடியாமல் இருக்கும் அவலம்.
இராமானுஜன் கணிதத்தில் மட்டும் மேதையல்ல. நற்பண்புகளிலும்,
மனிதாபிமானத்திலும் மாமேதை. கேம்பிரிட்ஜில் அவர் வாழ்ந்த காலம், முதலாம்
உலகப் போர்முடிவுற்ற தருவாய். தான் உண்டு பழகிய சைவ உணவு கிடைப்பதில்
பெருத்த சிரமம் இருந்த காலம். இருந்தும், அவர் சைவ உணவு பழக்கத்தை
கைவிடவில்லை. தனது வழிகாட்டியான பேராசிரியர் ஹார்டி தீவிரமான கடவுள்
மறுப்பாளர். இருந்தும் இருவரும் உயிருக்கு உயிராய் நட்புக்
கொண்டிருந்தார்கள். நோய் முற்றி இந்தியா திரும்பிய பிறகு வாழ்ந்தது ஓர்
ஆண்டு காலம் மட்டுமே. இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஹார்டிக்கு
எழுதிய கடைசிக் கடிதத்தில் கூட ‘நான் ஒரு முக்கிய சமன்பாட்டைக் கண்டு
பிடித்துள்ளேன். அதற்கு மோக் தீட்டா (ஆழஉம வுhநவய) என்று
பெயரிட்டுள்ளேன். அதில் சில எடுத்துக்காட்டுகளை தங்களுக்கு
அனுப்புகிறேன்” என்று எழுதினார். தான் படும் அவஸ்தை, ஒவ்வொரு நிமிடமும்
செத்துக் கொண்டிருப்பது, சிகிச்சைக்காக கோவை, கொடுமுடி, கும்பகோணம்,
சென்னை என அலைந்து திரிவது பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதவர். இந்தியா
திரும்பியபின் தன் ஆய்வுகளைத் தொடர சென்னைப் பல்கலைக் கழகம் அளித்த
ஸ்காலர்ஷிப்பின் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் கல்விக்கும் நோட்டு
புத்தகங்களுக்கும், உடைகள் மற்றும் பள்ளிக் கட்டணத்திற்கு செலவிடும்படி
தெரிவித்தவர். வறுமை, ஏழ்மை, காச நோய் ஆகியவை தன்னை பங்கிட்டுக் கொண்ட
போதும் இத்தகைய கருணை உள்ளத்தோடு இருந்தது கர்ணணை விஞ்சிய செயல் என்றே
குறிப்பிட வேண்டும்.
கும்பகோணத்தில் அவர் வாழ்ந்த சிறிய வீடு. படித்த டவுன் உயர்
நிலைப் பள்ளி. ஆய்வு மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இறுதியாக
ஆய்வு மேற்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம். தனது இறுதி மூச்சை நிறுத்திக்
கொண்ட சென்னை பெருமாள் செட்டியார் வீடு. ஆகியவை அனைத்தும் அவரது
நினைவுகளை சுமந்து நிற்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கலச் சிலை, 100 கணித மேதைகளின்
சொந்தச் செலவில் நிறுவப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ்
இயங்கி வரும், ‘தி இராமானுஜன் இன்ஸ்டிடிய+ட் ‡பார் அட்வான்ஸ் ஸ்டடி இன்
மேத்தமெடிக்ஸ்” என்ற நிறுவனத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்
உள்ளது போல மார்பளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கணித மேதை
இராமானுஜன் அருங்காட்சியகம் மற்றும் கணிதக் கல்வி மையம் நிறுவப்பட்டு
செயல்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள ‘டாட்டா இன்ஸ்டிடிய+ட் ஆ‡ப்
‡பண்டமண்டல் ரிசர்ச்”, அவரது கணிதக் குறிப்பேடுகளை பொக்கிசமாக பாதுகாத்து
வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அது
திகழ்கிறது. தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம், 32 வயதுக்குள் கணிதத்
துறையில் சாதனை புரிந்தவர்களை உலகில் எங்கிருந்தாலும் தேடிக் கண்டறிந்து,
ஆண்டு தோறும் ‘கணித மேதை இராமானுஜன் விருது” வழங்கி வருகிறது. அவர்
பிறந்த இடத்தில் மட்டும் எந்த அடையாளமும் இல்லை. ஈரோடு நகரில்
வாழ்பவரில் ஆயிரத்தில் ஒருவருக்காவது தெரியுமா? என்பது சந்தேகம்.
இராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22ஆம் தேதியை தமிழக அரசு மாநில அரசின்
தகவல் தொழில் நுட்ப நாளாக அறிவித்துள்ளது. இது எத்தனை பேருக்கு
தெரியும்?
கணித மேதை இராமானுஜனின் 125 வது பிறந்த ஆண்டை வெகு விமரிசையாக
கொண்டாட மத்திய, மாநில அரசுகள் ஓர் ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு இருக்க
வேண்டும். போதுமான நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். வருடம் முழுவதுக்குமான
கொண்டாட்ட நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு இருக்க வேண்டும். மத்திய அரசு பல
விசயங்களில் அமைதியாக இருந்துவிடுவது போல் இந்த விசயத்திலும் அமைதியாக
இருக்கலாம். மாநில அரசு இப்போதேனும் விழித்துக் கொள்ளட்டும். உலகம்
முழுவதும் பல ஆய்வு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்த திட்டமிட்டுள்ளன.
அறிவு ஜீவிகளோடு அந்த செய்திகள் முடிந்து விடும். குழந்தைகள்,
சிறுவர்கள், மாணவர்கள், மக்கள் என பெரும் எண்ணிக்கையில் இந்த மாமேதையின்
125-வது ஆண்டை கொண்டாட என்ன திட்டம் இருக்கிறது? கணித மேதை
இராமானுஜத்தின் 125-வது ஆண்டு விழாவையோ, பிறந்த நாளையோ, நினைவு நாளையோ
கொண்டாட வேண்டுவது, அவரது புகழ் பாடுவதற்கு அல்ல.
அவரது நினைவு அலைகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்க
வேண்டும். அதில் நாம் திளைப்பதும் அவசியம். இராமானுஜன் என்னும் மின்
காந்த அலையை நமது குழந்தைகளையும் உணர வைப்பது அத்தியாவசியம். அதன்
வழியாக படைப்பாற்றல் என்னும் பெரு நெருப்பை பற்ற வைத்தல் வேண்டும்.
இந்திய நாடு அறிவியல் தொழில் நுட்பத்தில் சுய சார்பை எட்ட இச்சமூகக்
கடமையை செய்தாக வேண்டும். இதற்காகவே 125-வது ஆண்டு பிரமிக்கத்தக்க
வகையில் கொண்டாடப்பட வேண்டும். பத்திரிக்கைகள், ஊடகங்கள், பள்ளிகள்,
கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து அமைப்புகளும் தங்கள்
பங்குக்கு நிகழ்ச்சிகளை திட்டமிடலாம்.
கணிதமேதை இராமானுஜன் வீடு உள்ள தெருவின் பெயர் ‘கணித மேதை
இராமானுஜன் வீதி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போது அந்த
வீட்டில் குடியிருக்கும் உரிமையாளர் சம்மதத்துடன் அவரது நினைவு இல்லம்
உருப்பெற வேண்டும். வீட்டின் மேல் தளத்தில் உரிமையாளருக்கு அரசு வீடு
கட்டிக் கொடுத்து விட்டு, கீழ் தளத்தை பார்வையாளர் சென்று காணவாவது
அனுமதிக்கலாம். 125-வது ஆண்டிலேயேனும் கணித மேதை இராமானுஜத்திற்கு
நிகழ்ந்த இந்த அவலம் துடைத்தெறியப்பட வேண்டும்.
நன்றி
முனைவர் நா.மணி
கட்டுரையாளர், மாநிலத் தலைவர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்
ஈரோடு கலைக்கல்லூரி பேராசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக