இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், ஜூலை 06, 2010

அகங்காரத் தமிழ் -ச.மாடசாமி

அன்பு நண்பர்களே.

பேராசிரியர் ச மாடசாமி தனித்தன்மை வாய்ந்த ஒரு கல்வியாளர், சிந்தனையாளர்,
நாட்டுப்புறக் கலை ஆய்வாளர், அற்புதமான ஆசிரியர், மகத்தான மனிதநேயமிக்க
எளிமையானவர்.....
சமச்சீர் கல்வி துவக்கப் படும் வேலையில், பாட நூல் உருவாக்கும் பணி
முதன்முறையாக சமூக ஆர்வலர்கள் கைக்குக் கிடைத்தது...அதன் அனுபவங்கள்
ஒன்றும் அப்படி நேர்க்கோட்டில் விருப்பமான திசையில் பயனப்படுவதாக
இருந்துவிடவில்லை. என்றாலும் கூட....என்ன, நான் என்ன குறுக்கீடு....இது
குறித்த அவரது கட்டுரை செம்மலர் இதழில் வெளிவந்ததை இணைத்துள்ளேன்.
வாசியுங்கள். உங்கள் பதிலை எனக்கும் மாடசாமிக்கும் , நண்பர்madasamy_ts@yahoo.com>
அனுப்பி வையுங்கள். இப்படி நான் அனுப்பிக் கொண்டிருப்பதே அவருக்குத்
தெரியாதுதான் என்றாலும்...

அகங்காரத் தமிழ்
-ச.மாடசாமி

எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் சகமனிதனோடு நாம் தினசரி பேசிப்
பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த
பிரச்சினைகளில் ஒன்று.

பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்
.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!

தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!

பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் - ஓர் அகங்காரத் தமிழ்..!

தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள்
பிறக்கின்றன. கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி
நிறுத்தும் தமிழ் எது ? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம்
செய்யும் தமிழ் எது ? உலகில் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும்
ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி
ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர்
அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

நானொரு தமிழாசிரியன், பாடப்புத்தகங்களின் வழியே மாணவர்களைச் சந்தித்து வந்தவன்.
பாடப்புத்தகங்கள் இரு பிழையான அளவு கோல்கள் கொண்டே உருவாக்கப்பட்டு வந்துள்ளன

ஒன்று - திணிப்பதுதான் கல்வி..!
இரண்டு -கடினமாக இருப்பது தான் தரம்

பாடப்புத்தகக் குழுவில் இருப்பவருத்ககுத் தெரிந்ததை அல்லது அவர்
விரும்பியதைக் கொட்டத்தான் பாடப் புத்தகம்..!

மாணவரின் மொழி -மாணவரின் விருப்பம் - மாணவரின் உலகம் குறித்துப்
பாடப்புத்தகம் கவலைப்பட்டதே இல்லை. பாடப் புத்தகம் -அகங்காரத்தின் வடிவம்
..! ஆசிரிய அகங்காரம், மொழி அகங்காரம், அதிகார அகங்காரம் மூன்றும் இணைந்த
வடிவம். இந்த அகங்காரம், தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விடாதபடி
காலமெல்லாம் பிள்ளைகளைப் பிரம்பேடுத்துக் துரத்தியிருக்கிறது.
`பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம் கொடுப்போம்`என்று தமிழ்நாடு அறிவியல்
இயக்கம் பாட்டாக வைத்த கோரிக்கை சாதாரணமானது அல்ல, அது கல்வி உலகில்
உயிர்த்துடிப்பு..!

செயல்வழிக் கற்றல் வந்த பின்னர் ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கான
பாடப்புத்தகங்கள் ஒழிக்கப்பட்டன. அதற்கு முன்னால் இருந்த
பாடப்புத்தகங்களைப் பார்க்க வேண்டுமே..! கொடுமை..!
முதல் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் அகவை, ஞாலம், நெய்தல், நன்னூல் போன்ற
பல சொற்கள் அறிமுகம். முதல்வகுப்பு மாணவனுக்குக் கற்பிக்கிற சொற்களா?
இவை? `ஞாலம்` என்ற சொல்லுக்கு அறிவு என்று ஒர் ஆசிரியர் வகுப்பில் பொருள்
சொன்னதை நானே கண்கூடாகப் பார்த்தேன்! அகவை என்பது வயதைக் குறிக்கும் சொல்
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தச் சொற்களை
அறிமுகப்படுத்திய பாடத்திட்டக் குழுவினரே வீட்டிலும் வீதியிலும் பேசாத
சொற்கள் இவை. இந்தச் சொற்களைத் திணிப்பதற்குச் சின்னஞ்சிறு பிள்ளைகளின்
பிஞ்சு மூளைகள் தானா கிடைத்தன? திணிப்பது அகங்காரம் அல்லவா?

முதல் வகுப்பு புத்தகத்தில் இருந்த மற்றொரு அநீதி `ஆத்திசூடி !`
முதல்வகுப்பு மாணவனுக்கான உபதேசம்- அறஞ் செய விரும்பு! குழந்தைக்
கல்வியாளர்கள் இதை ஒரு வன்முறை என்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்
மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசினேன். அப்போது முதல்
வகுப்பு மாணவனுக்கு ஆத்திசூடி தேவையா என்று கேட்டேன். தேவை! தேவை!
ஆசிரியர்கள் உரத்த குரல் எழுப்பினார்கள். காரணம் கேட்டேன்.-ரொம்ப
எளிமையான முறையில் சொல்லப்பட்ட அறம் என்றார்.ஓர் ஆசிரியை அவரிடம்
-இயல்வது கரவேல் என்றால் என்ன பொருள்? என்றேன். சொல்லச் சிரமப்பட்டார்.
`கரவேல்` என்ற சொல்லுக்கான பொருள் அந்தக் கூட்டத்தில் விரல் விட்டு
எண்ணக்கூடிய ஒரு சிலருக்கே தெரிந்திருக்கிறது. உடையது விளம்பேல் என்ற
வரிக்கு ஓர் ஒருமித்த பொருளை அன்று ஆசிரியர் கூட்டம் தரவில்லை. வீண்
குழப்பமே மிகுந்தது. `ஙப்போல் வளை`யும் அப்படித்தான்.! ஆத்திசூடி
எளிமையானதும் அல்ல. ஞானத்தின் தொகுதியும் அல்ல தையல் சொல் கேளேல்.! (பெண்
பேச்சைக் கேட்காதே) என்று சொன்ன நூல் தான் ஆத்திசூடி.

நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தைகளுக்குத் தொடக்கக்கல்வி தந்த
ஸிவ்வியா என்ற ஆசிரியையின் அனுபவம் (வநயஉhநச என்ற நூல்) இங்கு
குறிப்பிடத்தக்கது. தன் விருப்பப்படி கல்வியைத் தொடங்காமல் ஒவ்வொரு
மாணவரிடமும் தனித்தனியே உரையாடி ஒவ்வொருவருக்கும் உரிய ஆரம்பச் சொற்களைத்
தேடியவர் அவர். ஒரு மாணவிக்கு `அம்மா` ஒரு மாணவனுக்கு `துப்பாக்கி` ஒரு
மாணவனுக்கு -`கார்` அவர்களுக்குள் வட்டமிடும் சொற்களைக் கொண்டே
அவர்களுக்கான கல்வியைத் தொடங்கினார் ஸில்வியா

மிகவும் பொறுமையும் அக்கறையும் இருந்தால் மட்டுமே கல்வியில் இப்படிப்பட்ட
தொடக்கத்தைப் தரமுடியும்.

இன்றைக்கு முதல் முறையாகச் சமச்சீர்க் கல்வி முதல் வகுப்புத் தமிழ்
பாடநூல் பிற்போக்கான பல தடைகளைத் தாண்டி கொஞ்சம் முன்னேறியிருப்பது
மகிழ்ச்சியை தருகிறது.

சமச்சீர்க்கல்வி ஆறாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல் உருவாக்கத்தில்
பங்கேற்றவர்களுள் நானும் ஒருவன் ஆசிரியர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள்,
சமூக சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினரும் பாடநூல் உருவாக்கத்தில்
பங்கேற்றிருந்தார்கள். பாடநூல் இது முதல் அனுபவம்.
ஆசிரியரின் பிடியைக் கொஞ்சம் தளர்த்தி மாணவரை நோக்கிப் பாடப்புத்தகத்தை
நகர்த்துவது புத்தகத் தயாரிப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது. பாடப்
பொருள், மொழி, இலக்கணம், திறன் என எல்லாமே வகுப்பறையில் ஆசிரியரின் இடம்
குறைந்து மாணவரின் இடம் அதிகரிக்க வேண்டும் என்பது புத்தக தயாரிப்பில்
உழைத்தவர்களின் விருப்பமாக இருந்தது.

புத்தக உருவாக்கம் கமுக்கமாக நடைபெறவில்லை. அது ஒரு திறந்த மேடையாக
இருந்தது. படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் ஒரு பொது அழைப்பு இருந்தது.

பலரும் வந்து படித்துப் பார்த்துத் தட்டிக் கொடுத்துச் சென்றார்கள்
ஆனால், ஒரு சில ஆசிரியர்களின் இருந்து மனத்தாங்கலான ஒரு கருத்து வந்தது.
பாடப் புத்தகம் இத்தனை எளிமையாக இருந்தால் ஆசிரியர் எதற்கு? என்று
அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இன்று புத்தகம் முடிந்து வெளிவந்த பிறகு
நோட்ஸ் போடும் நிறுவனத்தார் ஒருவர் என் வீடு தேடி வந்து கேட்டார். ``
புத்தகம் இவ்வளவு எளிமையாக இருந்தால் எப்படி நோட்ஸ் போடுவது? இரண்டு
கேள்விகளுக்கும் இடையே ஒரங்குல தூரமும் இல்லை.

சமீபத்தில் ஒரு நாளிதழில் ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் குறித்து
மதிப்பிட்டிருந்தவர். நூல் மிக எளிமையாக இருக்கிறது எனக்
குறைப்பட்டிருந்தார். `மலிவு விலையில் கூறு கட்டி விற்கப்படும்
வாழைப்பழம்` என அவர் அங்கலாய்த்திருந்தார்.ஆசிரியரின் தேவையும்,
இருந்தால்தான் அது கனமான - தரமான கல்வி என்பது இவர்கள் அபிப்பிராயம்.

தமிழ்நாட்டு வகுப்பறைகளில் மாணவரின் வாசிப்புத் திறன் பலவீனமாக
இருக்கிறது என்பதுவே, சில மாதங்களுக்கு முன் வெளியான `அஸர் அறிக்கை` யில்
கிடைக்கும் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அறிவொளியின் போதும் இதே
அனுபவம் தான். ஆறாம் வகுப்பில் படித்த மாணவனுக்கு அறிவொளிப் பாடத்தை
வாசிப்பது சிரமமாக இருந்தது. அவன்தான் கிராமங்களில் எங்களுக்குக்
கிடைத்த தொண்டன்!

எளிமை என்பது எவருடைய தனிப்பட்ட விருப்பமும் அன்று, அது காந்தத்துண்டாய்
ஈர்க்கப்படவும், இது அத்தியாவசியத் தேவை.

ஆறாம் வகுப்புப் பாடநூல் உருவாக்கத்தின் இறுதிக் கட்டத்தில் சிறுசிறு
தடைகள் முளைக்க ஆரம்பித்தன. பிழைகளைத் திருத்த வந்தோர் திருத்தங்களை
வலியச் செய்தனர். அகராதி அகரமுதலி ஆனது. பெரியார் ராமசாமி பெரியார்
இராமசாமி ஆனார்.ர,ல , இரண்டையும் இன்று மொழி முதல் எழுத்துக்களாக
கொள்வதில் தடையே இல்லை என்று மொழியியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி
வருகின்றனர்.பிழை திருத்துபவர்கள் நவீன உரையாடல்களைக் காதில்
வாங்காதவர்கள்.!

மாணவர்களை வகுப்பறையில் பேசவைக்கும் நோக்கில் துணைப்பாடமாக
வைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக் கதைகள் ஒவ்வொன்றாய்ப்
பறிபோயின.நாட்டுப்புறக் கதை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் இல்லையா?
இல்லையாம்..! வடமொழி கலவாமல் பேசுவதும் எழுவதும் தான்
தமிழ்ப்பண்பாடாம்..! கேலிக்கூத்து..!

வேரின் துடிப்பு`என்ற அற்புதமான நாட்டுப்புறக் கதையை நீக்கி விட்டு
விவேகானந்தரைப் பாடமாக வைத்தார்கள்..! பாடப்புத்தகம் இன்னும் கணமாக
வேண்டும் என்பதற்காக 15 ஆக இருந்த திருக்குறள் பாடல்களை 20 ஆக
ஆக்கினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலான, `நாட்டுப்புறம்` என்று வருகிற இடத்தில் எல்லாம்,
நாட்டுப்புரம் எனத் திருத்தி, கடுமையான உழைத்து உருவாக்கப்பட்ட இப்
பாடப்புத்தகத்துக்குத் தீராத களங்கத்தை உண்டு பண்ணினார்கள்.

இத்தனைக்குப் பிறகும் மாணவர்கள் விரும்பிக் கையிலெடுக்கும் விதத்தில் -
ஆர்வமுடன் வாசிக்கும்படி - சமச்சீர்க்கல்வி ஆறாம் வகுப்புத் தமிழ்ப்
பாடப் புத்தகம் வந்திருக்கிறது. தமிழ்ப்பாடப் புத்தகம் இவ்வளவு அழகான
தோற்றத்துடன். இதுவரை வந்ததும் இல்லை. மாணவர்களை நோக்கிய அற்புதமான
நகர்வு இது.

ஆனால், நகர்வு தொடருமா? தடுத்து நிறுத்தப்பட்டு,ஆசிரியர் கையிலேயே
புத்தகம் அடைக்கலம் ஆகுமா என்பதேல்லாம் அடுத்தடுத்த பாடப்புத்தகங்கள்
வரும் போது தெரியும்..!

நன்றி: செம்மலர் ஜூலை இதழ்

by
M. DAVID AMALANADANE
PHARMACIST-ONGC
CHELLAMAL ILLAM, Ist FLOOR
123, Ist CROSS, BHARATHY NAGAR,
KARAIKAL 609 602.
Mobile: 94425 93448

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக