இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், நவம்பர் 17, 2020

NCSC ஆய்வறிக்கையின் வடிவமைப்பு

 

ஆய்வறிக்கையின் வடிவமைப்பு

 

குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வறிக்கை கீழ்க்கண்டவாறு வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

 

1.                முகப்புத் தாள் : முகப்பில் உங்கள் ஆய்வின் தலைப்பு பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட வேண்டும். தலைப்பு சுவையாகவும், சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆய்வின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருத்தல் அவசியம். மேலும் நீங்கள் வசிக்கும் மாநிலம், மாவட்டம், எந்த அமைப்பின் சார்பாக நீங்கள் கலந்துகொள்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயர், ஆய்வுப் பணியில் ஈடுபடும் குழுவின், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள், ஆய்வு வழிகாட்டியின் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். சித்திரப்படங்கள் (கார்ட்டூன்), வரைபடங்கள், இதுபோன்ற பிறவற்றையும் பயன்படுத்தி முகப்புத் தாளை வசீகரமாக்கலாம்.  ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் ஆய்வை சமர்ப்பித்தால், ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவற்றை எழுதவும்.

v  ஆய்வின் தலைப்பு

v  குழுத் தலைவர், உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி (மாவட்டம், மாநிலம் ஆகியவற்றையும் குறிப்பிடவும்)

v  வழிகாட்டியின் பெயர் மற்றும் முகவரி

 

2.             படிவம் – அ (பதிவுப் படிவம்) : நீங்கள் முன்னரே உங்கள் மாவட்ட ஒருங்கிணைபாளரிடம் சமர்ப்பித்த ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்பட்ட ஒரு பக்க அளவிலான பதிவுப் படிவத்தின் நகல்

 

3.           ஆய்வுச் சுருக்கம் : கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருக்க வேண்டும், ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம் (10-14 வயதினர் 250 சொற்களுக்குள், 15-17 வயதினர் 300 சொற்களுக்குள்) தரப்பட வேண்டும்

 

4.             உள்ளடக்கம் : அத்தியாயங்களின் வரிசைப்படி, தலைப்பு, துணைத் தலைப்புகள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், வரைபடங்கள் போன்ற விவரங்கள் பக்க எண்களுடன் தரப்பட வேண்டும்

 

5.             முன்னுரை : ஆய்வின் தலைப்பை மேலே உச்சியில் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தலைப்பு மட்டுமே உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளப் போதாது என்பதால் அது குறித்த சிறு அறிமுகத்தையும் தரவேண்டும். அது தலைப்பு மீதான பொதுவான புரிதலையும், ஆய்வு நடத்தும் விதம் குறித்து உங்கள் திட்டங்களையும் விளக்க வேண்டும் ஆய்வறிக்கையின் சுருக்கத்தையும் எழுதலாம்

 

6.             ஆய்வின் இலக்கும் நோக்கங்களும் : எந்த ஒரு செயலுக்கும் நாம் பலனை எதிர்பார்ப்போம். இந்தப் அத்தியாயத்தில் நீங்கள் என்ன பலனை/முடிவை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை சுருக்கமாக ஒரு பக்கத்திற்கு மிகாமல் குறிப்பிடவும். இறுதி முடிவை எட்டும்போது அது உங்கள் எதிர்பார்ப்பிலிருந்து மாறுபட்டிருக்க வாய்புள்ளது என்பதையும் நினைவில் கொள்க.

 

7.             கருதுகோள் : இங்கு நீங்கள் ஆய்வின் துவக்கத்தில் என்ன அனுமானித்திருக்கிறீர்கள் என்பதை விளக்கவும். இறுதி முடிவை எட்டும்போது உங்கள் அனுமானங்களுடன் ஒப்பிட்டு பரிசோதித்து எவ்வாறு உள்ளது என்று உறுதிப்படுத்த வேண்டும்

 

8.             தேவைக்கான வாக்குமூலம் : நீங்கள் இந்த ஆய்வைத் தேர்ந்தெடுத்ததற்கான அவசியங்கள் / காரணங்களை 50-100 சொற்களில் தெளிவு படுத்தவும். மேலும், இந்த ஆய்வானது மாநாட்டின் மைய / உப  கருத்துகளுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதையும் நிரூபிக்கவும்

 

9.             வேலைத் திட்டம் : ஆய்வை செய்து முடிக்க உங்கள் திட்டம் என்ன, என்பதை சுருக்கமாகக் குறிப்பிடவும். ஒவ்வொரு கட்டமாக அடுத்தடுத்த வேலைகளை விளக்கும் வேலைத் திட்ட வரைபடம் (FLOW CHART) மூலமாகவும் விளக்கலாம். வேலை துவங்கியபின் இவை மாறலாம். 1 – 5 அத்தியாயங்கள் நீங்கள் வேலையைத் துவக்கும் முன்பே தெளிவாக விவாதித்து எழுதப்பட வேண்டும்

 

10.          வழிமுறை : இது ஆய்வின் அடிப்படைத் தேவையாக இருப்பதால் ஆய்வின் கேள்வித்தாள் கவனமாக தயாரிக்கப்பட்டிருப்பது அவசியம். இந்த அத்தியாயத்தில் நீங்கள் ஆய்வை எப்பொழுது (தேதி, மாதம் போன்றவை), எவ்வாறு (மாதிரிகளை சேகரித்த விதம்) மேற்கொண்டீர்கள் என்பதைக் குறிப்பிடுதல் அவசியம். எனினும் நீங்கள் சேகரித்த தரவுகள்/தகவல்களை இதில் இணைக்க வேண்டாம். நில வரைபடங்கள், கணக்கெடுப்பு ஆய்வுப் படிவங்களின் மாதிரிகள் ஆகியவற்றை மட்டும் இணைத்தல் வேண்டும். செலவு குறைவாகவும் அதேநேரத்தில் தரமானதாகவும் உள்ள ஆய்வுகளே மிகவும் பாராட்டத் தக்கவை

(பின்குறிப்பு: தினசரி செயல்பாடுகளைப் பதிவு செய்யும் வகையில் நாட்குறிப்புப் புத்தகம் பராமரிக்கப்பட வேண்டும். மாவட்ட / மாநில / தேசிய அளவிலான மாநாட்டில் இதை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்)

 

11.          அவதானிப்புகள் : இங்கு நீங்கள் சேகரித்த தரவுகள்/திரட்டப்பட்ட தகவல்கள் தரப்பட வேண்டும். ஆய்வுகளின் முடிவுகள் அல்லது கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்/ எதிர்வினைகள் யாவையும் கவனமாகத் திரட்டப்பட வேண்டும். சேகரித்த விவரங்கள் உங்கள் ஆய்வை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் போதுமானவையாக இருத்தல் அவசியம்.

 

12.          தரவுகளைப் பகுத்தாய்ந்து விளக்குதல் : இங்கு நீங்கள் பரிசோதனை முடிவுகள் மூலம் கிடைத்த விவரங்கள் அல்லது கணக்கெடுப்பில் திரட்டிய தகவல்களைப் பகுத்தாய்வு செய்ய வேண்டும்.

 

13.          முடிவுகள் : இது நீங்கள் திரட்டிய தகவல்களை அலசி ஆராயவும், விளக்கங்களைத் தரவுமான தருணம். ஆய்வின் முடிவுகளை முன் வைக்கவும். பொருத்தமான வரைபடங்கள், புள்ளிவிவரங்கள், அட்டவணைகள் ஆகியவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத்தி முடிவுகளை முன்வைக்கலாம். அவற்றை அனைவருக்கும் புரியும் விதத்தில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் விளக்கம், கூடுமானவரை எளிமையாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். ஆனால் தீர்மானமான முடிவிற்கு இப்பொழுதே வர வேண்டாம். உங்கள் சொந்த கருத்துகளையோ, விளக்கங்களையோ தருவதற்கான இடமல்ல இது என்பதே உண்மை. இதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் திரட்டிய தரவுகள்/தகவல்கள் ஆகியவை, உங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மற்றவர்களுக்கு வேறு பொருளையும் தருவதாக இருக்கக் கூடும்.

 

14.          இறுதி முடிவு : தற்போது இறுதி முடிவை எட்டலாம். பிரச்சனையைத் தீர்க்க உங்களது ஆலோசனைகளையும் முன் வைக்கவும். நீங்கள் சிறிய அளவிலான மாதிரியை எடுத்து ஆய்வு செய்வதால் உங்களது ஆலோசனைகளையோ முடிவுகளையோ பொதுமைப்படுத்தி பெரிய அளவுகளுக்கு அவற்றைப் பொருத்தும் முடிவுக்கு வர வேண்டாம்.

 

15.          பிரச்சனைக்கான தீர்வு : பிரச்சனைகான ஒரு நிரந்தரத் தீர்வை (ஏறக்குறைய நிரந்தரத் தீர்வை) அமலாக்கும்போது, அது எவ்வாறு படிப்படியாக செயல்படுத்தப்பட்டது என்பதையும் பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதையும் வரிசைப்படி எழுதி வைக்கவும். புள்ளிவிவரங்கள், வரைபடங்கள், நிழற்படங்கள், பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக எழுதிய கடிதங்கள், பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் போன்றவற்றையும் அவற்றுடன் இணைக்கவும்.

 

16.          எதிர்காலத் திட்டம் : எப்பொழுதும் தொடர் செயல்பாடுகள் முக்கியமானவை. எனவே, அதற்கான செயல்திட்டம் தேவை. பொதுமக்களுக்கு, நீங்கள் செய்த வேலைகளைத் தெரியப்படுத்துவது அவசியம். அதற்கு எந்தவகையான திட்டம் வைத்துள்ளீர்கள்?

 

17.          நன்றியறிவிப்பு : இந்த ஆய்வுக்கு உதவிய தனி நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். நாம் பெற்ற உதவி மிகச் சிறியதாக இருந்தாலும், உதவியவர் எவ்வளவு எளியவராக இருந்தபோதிலும், ஒவ்வொருவர் பெயரையும் பதிவு செய்யவேண்டியதும், நன்றி தெரிவிப்பதும் மிகவும் முக்கியமானதாகும். எனினும் இது, ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருப்பது நல்லது.

 

18.          சான்றாவணங்கள் : இதுவே ஆய்வறிக்கையின் கடைசிப் பகுதியாகும். இங்கு, நீங்கள் ஒப்பு நோக்கிய அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட வேண்டும். (எகா. புத்தகங்கள், கட்டுரைகள், செய்தித்தாள்கள், தனிப்பட்ட நேர்காணல்கள் போன்றவை) இவற்றைக் குறிப்பிட்ட வரிசைப்படி எழுதவும். அகர வரிசைப்படி எழுதுவது சிறந்தது. உதாரணமாக,

a)      புத்தகமாக இருப்பின், அப்புத்தகத்தின் தலைப்பை அடிக்கோடிட்டு, நூலாசிரியர் பெயர், ஆய்விற்கான தகவல் உள்ள பக்க எண்கள், பதிப்பகத்தின் பெயர், முகவரி, வெளியிடப்பட்ட ஆண்டு ஆகியவற்றைக் குறிப்பிடவும்

b)      செய்தித்தாளாக இருப்பின், அச் செய்தித்தாளின் பெயரை அடிக்கோடிட்டு, ஆய்விற்கான தகவல் உள்ள பக்க எண்கள், தொகுதி மற்றும் இதழ் எண், பதிப்பித்த ஊர், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடவும்

c)      கட்டுரைகளாக இருப்பின், கட்டுரை வெளியான புத்தகம் / இதழ் / செய்திதாளின் பெயரை அடிக்கோடிட்டு, கட்டுரையாளர் பெயர், “கட்டுரையின் தலைப்பு“ (அடைப்புக் குறிக்குள்), ஆய்விற்கான தகவல் உள்ள பக்க எண்கள், தொகுதி மற்றும் இதழ் எண், தேதி, பதிப்பகத்தின் பெயர், முகவரி, வெளியிடப்பட்ட ஆண்டு ஆகியவற்றைக் குறிப்பிடவும்

d)      பேட்டி/நேர்காணலாக இருப்பின், சந்தித்த அறிஞர்/பிரமுகரின் பெயர், சந்திப்பு நடத்தப்பட்ட இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிடவும்

 

சில ஆய்வுகள், மேற்கண்ட வடிவத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முடியாதவையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, தினசரி பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் / இயந்திரங்களின் மாற்று உபயோகங்கள் போன்றவை. இத்தகைய ஆய்வறிக்கைகளில் தகவல்களை அலசி ஆராய்தல் மற்றும் தீர்வுகளை முன்வைத்தல் ஆகிய பகுதிகளில், அப் பொருட்களைப் பற்றிய விவரங்கள், மாற்று உபயோகங்கள் மற்றும் அதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கலாம். மேலும் ஏற்கெனவே உள்ள வடிவத்துடன்  மாற்றப்பட்ட  வடிவத்தின் ஒப்பீடு, அதனால் கிடைக்கும் மேம்பட்ட பலன்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் தேவைக்கேற்ற சிறு சிறு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையான விஷயங்களில் அறிக்கையின் வடிவமைப்பில் மாற்றம் கூடாது.

10-14 வயதினர் 2500 சொற்களுக்கு மிகாமலும், 15-17 வயதினர் 3000 சொற்களுக்கு மிகாமலும், கூடுமானவரை குறைந்த அளவில், நிழற்படங்கள், வரைபடங்கள், விளக்கக் குறிப்புகள் போன்ற தகுந்த ஆதாரங்களை இணைத்து ஆய்வறிக்கையை செழுமைப்படுத்தவும்.

நன்றி

மொழிபெயர்ப்பு

திருமிகு-சா.சோபனா, சேலம்

முற்போக்கு எழுத்தாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக