இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, அக்டோபர் 27, 2012

'எதனாலே... எதனாலே?’ படித்தவனும் ஏமாறுவது எதனாலே?

குத்துவிளக்கு ஒன்றில் பச்சைத் தண்ணீரை ஊற்றிப் படீரென்று தீக்குச்சி உரசி விளக்குப் பற்றவைத்தார் தில்லைக்கரசி. ஆச்சர்யமாக நான் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஆவென வாயைத்திறந்து நாக்கை நீட்டி நொடிகளில் சூடம் கொளுத்தி எனக்கு சுற்றிக்காட்டினார். மிரண்டுபோய் பின்வாங்கினால், விரல்களில் இருந்து பொலபொலவென திருநீறை உதிரவைத்து என் நெற்றியில் வைத்தார். வெலவெலத்துப்போனேன்!
கலகலவென அவர் சிரித்தது எனக்கு லகலகவெனக் கேட்டது. எனக்குத் தைரியம் ஊட்டியவர், ''தம்பி, பயப்படாதீங்க... நான் சாமியார் எல்லாம் இல்லை. மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டிருக்கும் சயின்டிஸ்ட்'' என்று விளக்கம் அளித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளராக இருப்பவர்தான் இந்த தில்லைக்கரசி. சேலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பிவருபவர், பள்ளிகளைத் தேடிச்சென்று இதுபோன்ற நிகழ்ச்சிகளைச் செய்து அதன் சூட்சும முடிச்சுகளை அறிவியல்பூர்வமாக அவிழ்த்துவருகிறார்.
''திருமணத்துக்கு முன்பு  நானும் பல்வேறு மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்தேன். என் வீட்டுக்காரர் இளங்கோ ஓர் எழுத்தாளர். பல்வேறு அறிவியல் சார்ந்த புத்தகங்களை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். எங்கள் திருமணத்துக்குப் பிறகும் என்னிடம் பல மூடப்பழக்க வழக்கங்கள் தொடர்ந்தது. அதை எல்லாம் அவர்தான் எனக்கு விளக்கம் சொல்லி படிப்படியாக ஒழித்தார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பகுத்து ஆராய்ந்து பார்க்கும் பழக்கத்தை எனக்குள் ஏற்படுத்தினார். இதனால், ஓரிரு வருடத்தில் நானும் ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக மாறினேன்.
அதன் பிறகு, சக தோழிகளுக்கு முற்போக்கான அறிவியல் சார்ந்த கருத்துக்களை எடுத்துக்கூறினேன். ஆனால், பலரிடம் என் கருத்துக்கள் எடுபடவில்லை. சொல்வதைக்காட்டிலும் செயல்கள் மூலமாக அவர்களைத் திரும்பிப்பார்க்க வைக்க முடியும் என்று நினைத்தேன். கணவரிடம் இதைச் சொன்னபோது 'மாய மந்திரம் என்று உலகத்தில் எதுவும் இல்லை. எல்லாம் தந்திரத்தால்தான் செய்கிறார்கள். அதனால், நிச்சயம் உன்னால் முடியும்’ என்று அவர் சில யுக்திகளைச் சொல்லிக் கொடுத்தார்.
பின்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சியும் பெற்றேன். அதன் மூலமாக மந்திரவாதிகள் மற்றும் சாமியார்களின் ஏமாற்று வேலைகளையும் இறைவன் பெயரைச்சொல்லி நடக்கும் மூடப்பழக்க வழக்கங்களையும்  என்னுடைய செயல் விளக்கத்தால் பொய் என்பதை நிரூபித்துவருகிறேன். தண்ணீரில் விளக்கு எரியவைப்பது, நாக்கில் சூடம் கொளுத்தி எரியவைப்பது, வயிற்றில் இருந்து மருந்து எடுப்பது, மணலைக் கயிறாகத் திரிப்பது, வெறும் கையில் இருந்து திருநீறை வரவழைப்பது என வித்தைகளைச் செய்துகாட்டி, அவை எப்படி அறிவியல்பூர்வமாக சாத்தியம் என்று விளக்கம் அளித்துவருகிறேன்.
திரியை மெழுகில் நனைத்து அதை விளக்கில்வைத்து தண்ணீர் ஊற்றினாலும் எரியும்; தண்ணீரை ஊற்றாமலும் எரியும்.
சூடம் எரியும்போது வெப்பம் மேல்நோக்கிச் செல்வதாலும் நாக்கில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருப்பதாலும் குறிப்பிட்ட நேரம்வரை வெப்பம் நாக்கைச் சுடாது. இப்படிச் செயல் விளக்கத்தையும் கொடுப்பதால் பலர் மூடநம்பிக்கையில் இருந்து விலகி விழிப்பு உணர்வு அடைந்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கும், பொது நிகழ்வுகளுக்குச் சென்று மக்களிடம் பல காலமாகத் தொற்றிஇருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழித்துவருகிறேன். இதில் யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது நோக்கம் இல்லை. உண்மைகளை எடுத்துரைத்து, ஏமாற்றுக்காரர்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்'' என்றார் சிரித்தபடி!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

thanks to : http://en.vikatan.com/article.php?aid=25588&sid=742&mid=32

1 கருத்து:

  1. மரியாதைக்குரிய சேலம் அறிவியல் இயக்க நண்பர்களே,இனிய வணக்கம்.!உண்மையிலேயே தங்களது குழுமம்தான் எனக்குத் தெரிந்தவரை சுறுசுறுப்பாக அறிவியல் கருத்துக்களை பரப்பி வருகிறது.வாழ்த்துக்களும்!வணக்கங்களும்!! என
    PARAMESDRIVER/
    TAMIL NADU SCIENCE FORUM/
    THALAVADY - ERODE Dt.

    பதிலளிநீக்கு