இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

Salem District Press Club: வாண்டுகளுக்காக ஒரு போட்டோ போட்டி....


வாண்டுகளுக்காக ஒரு போட்டோ போட்டி....

குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே அழகானது....சிரிப்பு, சண்டை, கோபம், பெரிய மனுஷத்தனம் என அவர்கள் உலகம் வேறு வகையான வண்ணம்...அந்த வண்ண மயமான வாண்டுகளிடம் ஒரு கேமரா கிடைத்துவிட்டால்.....?

 கேமராவும் கையுமாக வெயில், மழை என வட்டமிட்ட வாலுகள் தாங்கள் பார்த்தது, பிடித்தது, ரசித்தது என தங்கள் உலகத்தை கவிதையாய் வந்து கொட்டினர், பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த உலக ஒளிப்பட நாள்
(புகைப்பட நாள் ) போட்டியில்...

பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவை இணைந்து சிறுவர், சிறுமியர் மற்றும் இளையோருக்காக நடத்திய போட்டிக்குத்தான் குழந்தைகள் இப்படி தங்களது எண்ணங்களை புகைப் படங்களாய் சுட்டுத் தள்ளியிருந்தனர்.

 தொலைவில் இருந்து கஷ்டத்துடன் தலையில் தண்ணீர் சுமந்து வருவது, அதிகாலைச் சூரியன், மாலை வெயில், புதிதாய் மலர்ந்த மலர்....என அவர்கள் எடுத்த ஒவ்வொரு புகைப்படங்களும் ஒவ்வொரு கவிதை..அசைவற்ற அனைத்தும் அவர்களின் கைவண்ணத்தில் உயிர் பெற்றிருந்தன.

சிறு வயதில் இருந்தே புகைப்பட ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் நடந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளும் அவர்கள்முன் பேசிய   சர்வதேச விருதுகள் பெற்ற (சிறந்த புகைப்படங்களுக்காக விக்கிபீடியா, நேஷனல் ஜியாக்ரபி போன்றவற்றிற்காக) ஏ.எம்.சுதாகர், பேராசிரியர் தமிழ்ப் பரிதி, குறும்பட இயக்குநர் ஆண்டோ உள்ளிட்டோரின் கருத்துகளை கூர்ந்து கவனித்தனர்.

 பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப் பரிசும் சிறந்த புகைப்படங்கள் எடுத்த குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. அதில் சில வாண்டுகளிடம் அவர்களின் அனுபவங்களை குறித்து கேட்டோம்....

 சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து வந்திருந்த டி. சுப இலக்கியா, 'எங்க வீட்டுக்கிட்டே பூ எல்லாம் நிறைய பூத்துருக்கும் ரோஜாப் பூ, மல்லிகைன்னு எல்லாமே அழகாய் இருக்கும் தெரியுமா? ரொம்பப் பிடிக்கும் எனக்கு...
ஆனா சாயந்தரத்துலையே எல்லாம் வாடி விடுமா அப்போ எனக்கு மனசே கஷ்டமா இருக்கும்... அதெல்லாம் வாடாம இருந்தா எப்படி இருக்கும்? நினைச்சு பார்த்தாலே சூப்பரா இருக்கும்...அப்படி நினைக்கும் போதுதான் போட்டோவா எடுத்து வச்சுகிட்டா அழகா இருக்குமேன்னு தோணுச்சு...அப்படிதான் போட்டோ பிடிக்க ஆர்வமே வந்துச்சு..எங்க மாமாகிட்ட சொல்லவும் அவரு அவரோட கேனான் கேமராவுல எனக்கு படம் பிடிக்க கற்றுக் கொடுத்தாரு. இங்க போட்டி நடக்கிறதா மாமாதான் சொன்னாரு அதுக்கு எனக்கு பிடிச்ச பூ படத்தையே எடுத்து தந்து இப்போ சிறப்பு பரிசும் பெற்றிருக்கேன் ஜாலி ஜாலி' என்றார்.


பெயருக்கேற்பவே இலக்கியமாய் சின்னப்பம்பட்டி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் சுப இலக்கியாவுக்கு அப்பா இல்லை  அம்மா மட்டுமே.

 பணிக்கனூரில் இருந்து வந்த நாலாம் வகுப்பு சுபா உதயபாரதி 'எனக்கு இயற்க்கை காட்சினா ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுகிட்டே சூரியன் உதிக்கிறதும் மறையுறதும் சூப்பரா இருக்கும் அதை ரசிச்சுதான் நான் சூரியன் மறையுற போட்டோ எடுத்து இங்க கொண்டு வந்தேன்' என்றார் 'உதய'பாரதி



கன்னந்தேரியில் இருந்து வந்த சேதுநாராயணனோ ,'நீண்ட பனைமரத்தை எடுத்து போட்டிக்கு தந்தவர் அதிகம் பேசவில்லை ஆனால் அவர் படம் பேசியது.

போட்டியில் வென்ற குழந்தைகளுக்கான பரிசுகளை முட்டைக்குள் ஓவியங்களை வரைந்து சர்வதேச புகழ் பெற்ற ஓவியர் மேச்சேரி கிருஷ்ணன் (மேகி), சேலம் பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் நடராசன் ஆகியோர் வழங்கினர்.






இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ஆர்வத்தினை ஊட்டும் வகையில் தங்களது சிறந்த புகைப்படங்களை சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றத்தினைச் சேர்ந்த செய்தி புகைப்படக் கலைஞர்கள் கண்காட்சியாக வைத்திருந்திருந்தனர்.



சின்ன வயதில் அப்பா வாங்கித் தந்த ஒரு சின்ன கேமரா தான் பிற்காலத்தில் மிக பெரிய இயக்குனர் பாலு மகேந்திராவை உருவாக்கியது. சின்ன வயதில் அந்த கேமராவில் நிறைய படங்களைப் பிடிப்பேன் அந்த ஆர்வம் இன்று வரை தொடர்கிறது என்பார் அவர்.

 அப்படி இந்த போட்டி எதிர்காலத்தில் நிறைய படைப்பாளிகளை உருவாக்கினால் அதுவே உண்மையான வெற்றி அதற்கான விதையை  விதைத்ததாக  இருந்தது இந்த விழா.

ஆக்கம்: தமிழ்


நன்றி
Salem District Press Club: வாண்டுகளுக்காக ஒரு போட்டோ போட்டி....:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக