இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

தகவலுக்காக ... மின்வெட்டும் டெங்கி காய்ச்சலும்


ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற என்ற இரண்டு கொசு வகைகள் தான் டெங்கி (டெங்கு அல்ல)  காய்ச்சலுக்கு காரணமானவை. இவை நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்யும். பெரும்பாலும் இவை பகலில் தான் மனிதர்களை கடிக்கும். இந்த கொசுக்கள் தான் டெங்கி வைரசுகளை மனிதனுக்குள் ரத்தத்தின் மூலமாக செலுத்தி டெங்கி காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. நான்கு விதமான டெங்கி வைரசுகள் உள்ளன. அவை DENV 1, DENV 2, DENV 3 மற்றும் DENV 4 ஆகும். டெங்கி காய்ச்சல், டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று டெங்கி காய்ச்சலின் வகைகளும் உண்டு. இதில் டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் தான் கொடூரமானது. இதற்கு இதுவரை எந்த தடுப்பு ஊசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல ஊருக்கு ஊர் இதன் வகைகளும் மாறுபடும். பருவமழைக்குப் பின் தான் இதன் தாக்கம் அதிகமாயிருக்கும். இன்னும் ஓரிரண்டு மாதம் தான் பின் அடுத்த பருவ மழைக்காலம் வரை தப்பிக்கலாம். டெங்கி மட்டுமல்ல எந்த வைரசுகளும் நம்
உடலில் வந்துவிட்டால் சாகும் வரை நம்முடனே இருக்கும். நாம் பலவீனப்படும் போது அவை தலை தூக்கும். எனவே தான் தடுப்பு ஊசி அவசியம். 
சமீப காலமாக நம் தமிழகம் தாங்க முடியாத மின்வெட்டை சந்தித்து வருகிறது. மின்வெட்டுக்கும் டெங்கி காய்ச்சலுக்கும் தொடர்புண்டு. நினைத்த வேளையில் நம்மால் போர்வெல் இயந்திரங்களை இயக்க முடியாததால் நாம் தண்ணீர் பிடித்து வைக்கிறோம். ஆனால் அவையே இந்த கொசுக்கள்
இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகிறது. தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தாற் போல வாழக்கற்றுக்கொள்ளுங்கள். தப்பித்துக்கொள்ளலாம். 


இன்னும் அதிகத் தகவலுக்காக 

டெங்கி காய்ச்சல் எப்படி பரவுகிறது?

டெங்கி காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசை டெங்கி வைரஸ் என்பார்கள். இதில் நான்கு வகைகள்உண்டு. இது பிளேவி வைரஸ் வகைகளை சார்ந்தது. இந்த வைரசுகள் ஆசிய புலிக்கொசு (ஏடிஸ்அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற கொசுக்களினால் பரவுகிறது. இந்த கொசுக்கள் மனிதர்கள்உபயோகப்படுத்தும் பொருட்களில் (தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்கள், டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும்பல...) உள்ள நன்னீரில் இனப்பெருக்கம் செய்பவை. 

டெங்கி என்ன தான் செய்யும்?

கொசுக்களால் இந்த வைரசுகள் நம் ரத்த நாளங்களில் செலுத்தப்படும். செலுத்திய ஒரு வாரத்திற்குப்பின்தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். உடலில் வலி, மூட்டு வலி, காய்ச்சல், விழி வட்டத்தில் வலி (கண்தீர்ப்பது போல் வலிக்கும்) ஏற்படும். சில சமயம் வாந்தி, குமட்டல், தோலில் புண் என்று கொஞ்சம் கொஞ்சமாகஅறிகுறிகள் அதிகரிக்கும். நோய் வந்த முதல் கட்டத்தில் டெங்கி காய்ச்சல் ஏற்படும். 
வைரசுகள் நம் உடலில் பெருகப்பெருக நோயின் தீவிரம் அதிகரிக்கும். இது இரண்டாம் நிலை. இந்தகாய்ச்சலுக்கு டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று பெயர். விழித்திரையிலிருந்து ரத்தம் வரலாம், தோலில்உள்ள புங்களிளிருந்து ரத்தம் கசியலாம். அடுத்து மிகவும் கொடூரமான மூன்றாம் நிலை  டெங்கிசாக் சிண்ட்ரோம். இது நிச்சயமாக உயிரைப் பறித்துவிடும். 

நாம் என்ன செய்ய வேண்டும்?

நம் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம்?  பரவலான விழிப்புணர்வும், மக்களின், தொண்டு நிறுவனங்களின், அறிவியல் இயக்கங்களின் பங்கு மிகஅவசியம். விரிவாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் நோயை அடுத்த கட்டத்திற்கு செல்லாதவாறு தடுத்துவிடலாம். நோய் முற்றினால் காப்பாற்றுவது கடினம். உண்மையில் டெங்கி ஆட்க்கொல்லி நோயல்ல.பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகிறார்கள். முதியோர்களும் அடக்கம். 

ஏதாவது தடுப்பு ஊசி உள்ளதா? 

இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புவோம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. இறக்குமதி செய்யவேண்டும்.

இந்தியாவில் மட்டும் தான் இந்த அச்சுறுத்தலா?

வெப்ப மண்டல நாடுகளில் தான் இந்த கொசுக்களின் தாக்கமும், வைரசுகளின் தாக்கமும் அதிகம்.நம்மை விட தாய்லாந்துக்காரர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். இலங்கையிலும்,  சீனாவிலும் இவ்வகைகொசுககள் உள்ளன. அதனால் சர்வதேச முக்கியத்துவம் உண்டு. 

இந்த கொசுக்களை அழிக்கவே முடியாதா? 

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தில் நாமெல்லாம் நேற்று வந்தவர்கள். கொசுக்கள்எல்லாம் நம்மைவிட லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே பரிணமித்துவிட்டன. நாம் தான் எத்தனைஎத்தனை கொசுவிரட்டிகளை (கவனிக்கவும் கொசுவிரட்டி - கொசுக்கொல்லி அல்ல) சந்தித்து விட்டோம். இதன்பயன் கொசுக்களின் சிற்றினங்களிலேயே பல வகைகள் மரபணு மாற்றத்தின் விளைவாக தோன்றி விட்டன.எல்லாவிதமான வேதிக் கொல்லிகளையும் எதிர்கொள்ளும் திறனை இந்த கொசுக்கள் பெற்றுவிட்டது.லார்வாக்களை மட்டுமே அழிக்க முடியும். அதுவும் நீரில் வாழ்வதால் அவை பறந்து தப்பித்துச் செல்லவாய்ப்பில்லை லார்வாக்களின் வாழ்விடத்தை அழித்தாலே இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். 

என்ன தான் செய்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்?

BT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லார்வாக்களின் உண்ணும் திறனை அழித்துவிட முடியும்என்கிறார்கள். மரபு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பொது இடங்களில் பறக்க விட்டு அவற்றைஇயற்கையான கொசு இனங்களோடு கலவி செய்து அவைகளை மலடாக்கலாம் என்று எத்தனையோ திட்டங்கள்வைத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றுச் சூழலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு நமக்கே வினையாகப்போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் உள்ளது. தடுப்பு ஊசி தயாரிப்பதில் முனைப்போடுசெயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதிப்பார்கள் என நம்புவோம்.
--
Dr.S.Dinakaran
Head & Research Supervisor
Department of PG Zoology & UG Biotechnology
Centre for Research in Aquatic Entomology
The Madura College
affiliated to Madurai Kamaraj University
TPK Road, Madurai.625011
Tamil Nadu, India
Mobile: 91- 99949 - 00064
Office: 91-452-2639994
Fax: 0452 2675238

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக